திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையிலும், தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள கீழதிருமதிகுன்னம் பகுதியில் விவசாயம் செய்துவரும் கலியமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெகு நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலிக்கு பல்வேறு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகாததால் கலியமூர்த்தி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த முதியவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வயல்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து முதியவர் மயங்கி விழுந்திருப்பதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கலியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொரடாச்சேரி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.