ராமநாதபுரத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த வெள்ளப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது சாயல்குடி அடுத்துள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(26) என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியது தெரிய வந்துள்ளது.
இதனை அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அபுபக்கர் வீட்டை சோதனை நடத்தியுள்ளனர். அங்கு அவரது வீட்டிற்கு பின்னால் கஞ்சா செடிகளை வளர்த்து அதனை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் 33 கஞ்சா பாக்கெட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடலாடி தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சந்திரன் ஆகியோர் கஞ்சா தீ வைத்து அழிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் அபுபக்கரை கைது செய்த போலீசார் கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர்.