இந்தியாவில் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் என அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் எட்டை எண் இணைப்பு என்பது அவசியமாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2.30 கோடி மின் இணைப்புகள் இருக்கும் நிலையில், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மற்றும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் இருக்கிறது.
இவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பலரும் ஆதார் எண்ணுடன் மின்கட்டண எண்ணை இணைக்க ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு ஒரு குடும்ப தலைவரின் பெயரில் பல மின் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில் ஆதார் எண் இணைக்கப்பட்டால் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தகவல்கள் பொய்யானது என்று கூறியுள்ளார். அதாவது ஒரு பயனாளி 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்கள் ஆதார் அட்டை எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா என்றால் சந்தேகம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் பொதுமக்களின் சந்தேகத்தை உரிய முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என அரசுக்கு ரேஷன் கார்டு தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.