தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பிறகு படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற 9-ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகிறது. இதன் காரணமாக நடிகர் வடிவேலு பட குழுவினருடன் இணைந்து ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கூறியதாவது, என்னிடம் வந்து இயக்குனர்கள் கதை சொல்லும் போது அந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன்.
நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலு ரொம்ப ஆட்டம் போடுகிறான். ரொம்ப திமிர் பிடித்தவன் என்றெல்லாம் புரளியை கிளப்புகிறார்கள். நான் என்னோட படம் மற்றும் காமெடியை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறேன். அது பிடிக்காத சிலர் பொறாமையில் அப்படி பேசுகிறார்கள். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை ரசிக்கிறார்கள். இது மட்டும் எனக்கு போதும் என்று கூறியுள்ளார்.