விமானம் வீடுகளின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி-340 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானமானது சான் டியாகோ நகரின் வடகிழக்கில் இருந்து சுமார் 20 மைல்கள் அப்பால் புறநகர் பகுதியில் 2 வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 வீடுகள் மற்றும் ஒரு லாரி உட்பட பல வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தீப்பற்றி ஏரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. மேலும் விமானம் எங்கு புறப்பட்டு சென்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையின் துணை தலைமை அதிகாரி கூறுயதாவது, “இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்” என்றும் கூறினார்.
குறிப்பாக இந்த விமான விபத்து சான் டியாகோ நகரில் உள்ள சாண்டனா பள்ளியின் மிக அருகிலேயே நடந்துள்ளது. இருப்பினும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சாண்டனா பள்ளி நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தில் இருந்து முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.