சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ம் தேதி நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
இது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை தொடங்கி நடைபெற்று வந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குத் தொற்று பரவாமல் இருக்க சென்னையைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை முடிவடைந்த பிறகு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிகிறது.