மைசூர் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோமீட்டர் பயணித்து மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகிறார். தனது 10 வயது மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால் மகனை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் ஒரு நாள் கூட தவறாமல் மாத்திரையைக் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இல்லையெனில் 18 வயது அடைவதற்கு முன்பு அவருக்கு கை கால் வலிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்து உள்ளார் ஆனந்த். மகனுக்கு மருந்து இல்லாத காரணத்தினால் அவர் இருந்த பகுதிக்கு அருகில் பல மருந்தகங்களில் கேட்டுப் பார்த்தும் அந்த மருந்து கிடைக்கவில்லை. இதற்காக இரண்டு நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து பெங்களூரை சென்றடைந்தார். அவர் கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்து இருப்பதை அறிந்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதையடுத்து அவருக்கு தேவையான மருந்தையும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதை பெற்றுக்கொண்டு இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பி மகனுக்கு மருந்து கொடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில் “எனது மகனுக்கு தேவையான மருந்து வாங்க மைசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அலைந்து பார்த்தேன். ஆனால் ஒரு மருந்தகங்களில் தேவையான மருந்து கிடைக்கவில்லை. எனது மகன் ஒரு நாள் கூட மருந்து சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் பெங்களூர் வரை சைக்கிளில் சென்றேன். நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. எனது மகனின் உடல் நலம் எனக்கு முக்கியம். அவனுக்கு மருந்து வாங்கி வந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.