தனியார் நிறுவன பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு பேருந்துகள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளில் 40 பெண் ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகளின் டிரைவர்களும் ஒருவரை ஒருவர் முந்துவதற்காக வேகமாக சென்றுள்ளனர். இதனால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் இறங்கி விட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். அதன்பின் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து நடந்த நேரம் அங்கு வாகனங்கள் எதுவும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.