திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று களத்திற்குள் விடப்பட்டபோது தடுப்புச்சுவர் ஏதும் அருகில் இல்லாததால் திசைமாறி அருகே இருந்த கிணறு ஒன்றுக்குள் தவறுதலாக விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து எந்தவித பாதுகாப்பும் இன்றி போட்டி நடத்திய ஊரின் முக்கிய தலைவர், கவுண்டர் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் மாட்டின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவறுதலாக நடந்த விபத்திற்காக ஊர் தலைவர்களை கைது செய்ததை கண்டித்து வாணியம்பாடியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.