கொரோனா தொற்று பரவல் காரணமாக, 82 கிராமங்களுக்கு மட்டும் எருதுவிடும் விழா நடத்த கலெக்டர் அனுமதித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். எருது விடும் விழா தொடர்பாக காளை உரிமையாளர்கள் மற்றும் எருதுவிடும் விழா சங்கத்தினருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டமானது கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை எருதுவிடும் விழா குழுவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 82 கிராமங்களில் மட்டுமே எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளித்துள்ளதாக கலெக்டர் நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலின் காரணமாக ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் அனைத்து எருதுவிடும் விழா நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காளையின் உரிமையாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் எருதுவிடும் விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து கட்டாயம் கொரானா பரிசோதனை செய்து கொண்டு தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இல்லையெனில், அவர்கள் எருதுவிடும் விழாவில் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் 150 வீரர்கள் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பார்வையாளராக வருபவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை அவ்விடத்திலேயே செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் மட்டுமே எருதுவிடும் விழா நடத்த பதிவு செய்ய வேண்டும் எனவும் இதற்காக விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 4 எனவும் தெரிவித்துள்ளார். கலெக்டரின் உத்தரவை மீறி அனுமதி பெறாமல் எவரேனும் எருதுவிடும் விழா நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.