வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையினரின் எதிர்பார்ப்புஎன்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நாட்டின் உயிர்நாடியாக திகழும்விவசாயத்துறை ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி பேருக்கு வாழ்வாதாரமாக உள்ள இத்துறை நாட்டின் வளர்ச்சியில் சுமார் 18% பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 6.3% ஆக இருந்த இத்துறையின் வளர்ச்சி விகிதம் 2019ஆம் ஆண்டு 2.9 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே நேரம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நிலவரப்படி உணவு தானியக் கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து 75 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. எனினும் இத்துறையின் பிரச்சனைகள் முடிவு காணப்படாத ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஆண்டு பட்ஜெட்டின் போது முன்வைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
விலை நிர்ணயம் வேண்டும்:
லாபகரமான விலை கொடுத்தால் மட்டும் தான் விவசாயிகள் பொருள்களை வாங்கும் சக்தியை பெற முடியும் இல்லையெனில் கடன் வாங்கியே சிக்கலில் சிக்க வாய்ப்புகள் ஏற்படும் என்று பெரும்பாலான கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
மானியங்கள் தொடர வேண்டும்:
விவசாயத் துறையினருக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டு வருவதாக சாட்டும் விவசாயிகள் சோலார் பம்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 90 சதவிகிதத்திலிருந்து 70 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். பொதுவாக பட்ஜெட் திட்டங்கள் பாசன பகுதி விவசாயிகளை மையப்படுத்தி அமைவதாகவும், மானாவாரி விவசாயிகளுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
வேற எதுவும் வேண்டாம்., இது மட்டும் போதும்:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வட்டி இல்லா வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கும் விவசாயிகள் அரசாங்கம் பெரிய பெரிய மானியங்கள் திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக வட்டியில்லா கடன் என்ற ஒன்றை மட்டும் தந்தால் அதுவே எங்களுக்கு போதுமானது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.