Categories
தேசிய செய்திகள்

பிஎஸ்என்எல்: இன்று ஒரே நாளில் 79000பேர் ஓய்வு – தப்பிப் பிழைக்குமா?

இன்று ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள்  விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில்  மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர்.

2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் , 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைசயே சந்தித்து வருகிறது. இதைதொடர்ந்து எம்டிஎன்எல் நிறுவனமும்  கடந்த  9 ஆண்டுகளாக  நஷ்டத்தில்தான் இயங்கிவந்ததுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இதில் சுமார் 51 சதவிகிதம்,  பணியிலிருந்து விலகுகின்றனர். தமிழகத்தில் சென்னைத் தொலைபேசி வட்டத்தில் 2,571 பேரும் சென்னை தவிர்த்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் 5,308 பேரும் ஓய்வு பெறுகின்றனர்.

இதேபோல, மும்பை மற்றும் தில்லி தொலைபேசி சேவைகளைக் கவனிக்கும் அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனத்திலிருந்து 14,378 ஊழியர்கள் பணியிலிருந்து ‘விரும்பி’  விலகுகின்றனர்.

அரசு அணுகுமுறை, நிதிப் பிரச்சினை, தொழில் போட்டி போன்ற எண்ணற்ற பிரச்னைகளால் நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கும் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்திருந்தன.

தொழில் போட்டியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் 4 ஜி அலைக்கற்றையில் உலவிக் கொண்டிருக்க, பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜியை வைத்துக்கொண்டுதான் சந்தையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அடுத்தடுத்த  நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டது.

பிஎஸ்என்எல்-க்குத் தேவையான நிதி ஆதாரமும் கிட்டவில்லை,மேலும்  தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடவும் முடியவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆனால்  தனியாருக்கு இணையாகப் போட்டியிடத் தங்களை அனுமதிக்கவில்லை எனவும் நிறுவனம் செயல்பட தூண்டவில்லை என்று இப்போதும் அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஒழுங்காக ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், தாமதமாக வழங்கப்பட்டுவந்தாலும்  இந்த நிறுவனங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில்  மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். 

Categories

Tech |