அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் கல்யாண புரோக்கர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி பகுதியில் கல்யாண புரோக்கரான தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருமாள்பட்டி பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூருக்கு சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை விரிவாக்கத்திற்காக போடப்பட்டுள்ள ஜல்லி கற்களால் மோட்டார் சைக்கிள் சறுக்கி விட்டது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த தியாகராஜன் மீது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு பேருந்து ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.