பிரித்தானியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் பல்வேறு வகையான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் உலக சுகாதார அமைப்பானது ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா போன்ற தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகாரம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, துருக்கி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட போதிலும் அவர்கள் செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டனர்.
அதிலும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இரண்டு தவணைகள் செலுத்தி இருப்பினும் இங்கிலாந்திற்கு வருகை தரும் இந்தியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இந்த விதிமுறையானது இனவேற்றுமை என்று காங்கிரஸின் மூத்த எம்.பி.யான சசிதரூர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் தற்போது பிரித்தானியா திருத்திய பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது .
அதில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பிரித்தானியாவிற்கு வருகை புரியும் இந்தியர்களுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும். இருப்பினும் பயண விதிமுறைகள் படி தடுப்பூசி சான்றிதழில் ஏற்படும் இன்னல்கள் காரணமாக இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பினும் இந்தியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.