கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து 413 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கான தடுப்பு மருந்து கண்டு பிடித்ததால் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களும், ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கொடூர கொரோனா வைரசின் தாக்கத்தால் இங்கிலாந்து நாட்டில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 5300 தாண்டியுள்ளது. இதற்கிடையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கம் மூலம் ”என்னை நான் தனிமைப்படுத்தி கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார். வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண வார்ட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரியின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இது உலக நாடுகளை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.