பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் யூனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம், முதல் தவணைக்கு காத்திருக்கும் மக்கள் ஆயிரம் பவுண்டுகள் வரை வட்டியின்றி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களும், அவசரத்திற்கு பணம் தேவைப்படும் மக்களும், யூனிவர்சல் கிரெடிட் திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவி கிடைக்காமல் இருந்தது. கொரோனா சமயத்தில் ஒவ்வொரு வாரமும் 20 பவுண்டுகள், இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதனை ரத்து செய்தார். எனவே, மக்கள் எரிபொருள் மற்றும் உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இது மட்டுமல்லாமல், யூனிவர்சல் கிரெடிட் மூலம் உதவி பெறும் மக்கள் ஐந்து வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆயிரம் பவுண்டுகள் வரை வட்டியின்றி கடனைப் பெற்றுக் கொள்ளவும், அதனை தவணை முறையில் செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, யுனிவர்சல் கிரெடிட் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த 3 நாட்களில் பணம் கொடுக்கப்பட்டு விடும். ஆனால் இத்திட்டத்தில் பணம் கோரி, அதன்பின் பணி கிடைத்தவுடன் உதவியை ரத்து செய்து விட்டாலும், அப்போது, பெற்ற கடன் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும்.
மேலும், யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தில் பணத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள், தகுந்த காரணம் குறிப்பிடுவதோடு, தங்களால் கடனை திருப்பி செலுத்திவிட முடியும் என்று நிரூபித்தால் மட்டுமே கடன் கிடைக்கும். மேலும், எவ்வளவு தொகையை, ஒவ்வொரு முறையும் செலுத்த முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.