பிரிட்டன் அரசு, உக்ரைனிலிருந்து உறவினருடன் வந்த சிறுமியிடம் ஆவணங்கள் இருந்தும் தங்கள் நாட்டில் தஞ்சமடைய அனுமதி மறுத்திருக்கிறது.
உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து சுமார் 5.2 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்களின் உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது.
எனவே, அதிகப்படியான உக்ரைன் மக்கள் பிரிட்டனில் தஞ்சமடைய தொடங்கினார்கள். அதன்படி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமியான அலிசா மிரோஷினா பிரிட்டனில் தன் உறவினரோடு தஞ்சமடைய தகுந்த ஆவணங்களுடன் சென்றிருக்கிறார். எனினும் பிரிட்டன் அரசு சிறுமிக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
எனவே, சிறுமி தன் உறவினர்கள் இருவருடன் போலந்து நாட்டில் ஐந்து வாரங்களாக தவித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து பிரிட்டனில் இருக்கும் சிறுமியின் உறவினர்களான நிக் ஆண்டர்சன் மற்றும் கரேன் ஜோன்ஸ் தெரிவித்ததாவது, ஆவணங்கள் அனைத்தையும் எப்படியோ சமர்ப்பித்து விட்டோம்.
ஆனால், தற்போது சிறுமி அலிசாவுடன் வந்த விக்டோரியா சௌச்கா, சிறுமிக்கு உறவினர் தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம் இல்லை என்று அரசு மறுப்பு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள். அச்சிறுமியின் பெற்றோர் ரஷ்யாவிற்கு எதிரான போரில் இணைந்திருக்கிறார்கள். எனவே தான் சிறுமியை உறவினர்களுடன் அனுப்பியுள்ளனர்.