சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க சமூக விலகல் மிகவும் அவசியம், அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து. ஆனால் பல மாநிலங்களில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை, சமூக இடைவெளியை மக்கள் மதிக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசையும் வலியுறுத்தி வந்தது. தமிழகத்திலும் இந்த நிலையில் தொடர்ந்தது. இதனால் தமிழக முதல்வர் 144 உத்தரவு, ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடிக்காவிட்டால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வீடு தேடி நிவாரணம் வழங்கப்படும் என்ற உத்தரவும் பிறப்பித்திருந்தது.இந்நிலையில் திண்டுக்கல்லில் ஊரடங்கு பின்பற்றி, வெளியே வராமல் வீட்டிலிருந்தே பொருட்களை வாங்கினால் பிரிட்ஜ், பீரோ, குக்கர் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக பீரோ, மூன்றாம் பரிசாக குக்கர் வழங்கப்படும். தனிநபர் இடைவெளியை பின்பற்றினால் சிறப்பு பரிசாக 108 பேருக்கு சேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.