திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் காணாமல் போனதால் மணமகனின் வீட்டார் நஷ்டஈடு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் வாலிபர் ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவு செய்ய பட்டிருந்தது . இந்த திருமணம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக திருமண காகிதங்கள் அச்சிடப்பட்டு, திருமணப்புடவை, நகை உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த திருமணதிற்காக திருமண மண்டபமே கோலாகலமாக காட்சியளித்தது. மேலும் திருமணத்திற்காக சமையல் ஏற்பாடுகள் மற்றும் மேளங்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு திருமண மண்டபத்திற்கு மணமகன் வீட்டார் மற்றும் அவரது நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.
ஆனால் வெகு நேரமாகியும் மணப்பெண் குடும்பத்தினர் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதுகுறித்து மாப்பிள்ளையின் உறவினர்கள் மணப் பெண்ணின் பெற்றோரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது திருமணத்திற்காக அழகு நிலையத்திற்கு சென்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் மணமகன் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் மனவருத்தமடைந்தனர். மேலும் திருமணத்திற்காக செலவிட்ட பணத்தை நஷ்டஈடாக கேட்டு தருமாறு மணமகன் வீட்டார் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணப்பெண் காணாமல் போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.