சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தற்கான ஆதாரம் உள்ளது என மதுரை கிளை தெரிவித்தது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வது எப்போது ? என்ற கேள்விக்கு விசாரணைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் பதிலளித்துள்ளார்.