சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்ற தலைமையில் இரு அணிகளாக பிரிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிதாக அவரது ஆதரவாளர்களை பல மாவட்டங்களில் செயலாளர்களாக நியமித்தார். குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் 35 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தற்பொழுது சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் நிர்வாகிகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல் பட்டியலை பெறுவதும், மற்ற மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் வருகின்ற 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிகிறது. அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட இருப்பதை முன்னிட்டு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் தற்போது இந்த ஆலோசனைக் கூட்டமானது தனியார் ஓட்டலில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக நடைபெற்று வருகிறது.