நடிகர் ரஜினி மீது வழக்கு பதிய கோரிய வழக்கின் நாளை மறுநாள் சென்னை குற்றவியல் நீதிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது.
கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜனவரி 18ம் தேதி புகார் அளித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி அவதூறுகளை பரப்பி அவர் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளார்.எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் மீது ஒரு மாத காலமாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் எழும்பூரில் உள்ள 2ஆவது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி , துக்ளக் விழாவில் பேசிய ரஜினி மீதான புகாரில் வழக்கு பதிய முகாந்திரம் உள்ளதா ? இல்லையா என்று கேள்வி எழுப்பி சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்த நிலையில் காவல்துறை அறிக்கையை பெற்றுக் கொண்டு வழக்கின் தீர்ப்பை 9 ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.