எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் கடந்த 9ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத்சிங்கும், மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் விளக்கமளித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அளித்த விளக்கத்தில், டிசம்பர் 9ஆம் தேதி சீனா ராணுவ வீரர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், தற்போது இருக்கக்கூடிய, எல்லைகளின் நிலையை மாற்றி அமைக்க இருந்த நிலையில் சீன ராணுவ முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தூதராக ரீதியிலாக கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கடந்த 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவினுடைய ஒரு பகுதி கூட தாரை வார்க்கப்படாது, இந்தியாவினுடைய உரிமை முழுமையாக பாதுகாக்கப்படும் என உறுதி அளிப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இரண்டு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகவும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவோ அல்லது படுகாயம் அடையவும் இல்லை என்றும் ராஜ்நாத்சிங் தமது விளக்கத்தினை தெரிவித்தார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளியே நடப்பு செய்திருக்கிறார்கள்.