தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக விலகல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ஒரு பாட்டில் தான் விற்க வேண்டும். நிபந்தனைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில் சுமார் 3,700க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. எதிர்கட்சிகள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்ததற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படிருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் குடுமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.