அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகின்றது. பல பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு , தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இதனால் நேற்று இரவு பலத்த மழை பெய்த நீலகிரி , சேலம் , ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தென் மேற்கு – மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வட தமிழகம் – தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் , ஆந்திரா , புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஏற்கனவே அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகின்றது. தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமன் நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.