அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதமும் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பு சமர்ப்பிக்கவுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து பிற மாநிலங்களில் உள்ள பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் மனுக்களும் பெறப்பட்டு வருகின்றது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தெரிவிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.