தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்கள் இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி இல்லை, நோய் கட்டுப்பாடடு பகுதியில் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஓட்டுனர்கள் ஆட்டோ, சைக்கிள் ரிக்சா ஓட்ட அனுமதி இல்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோ, சைக்கிள் ரிக்சா ஆகியவற்றை தினமும் 3 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆட்டோக்களில் பயணிகளுக்காக சானிடைசர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுனர்கள், பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஓட்டுனர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவியும், வாகனத்தை சுகாதாரமாகவும் பேண வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என முதல்வர் கூறியுள்ளார்.