ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டம்பாளையம், வடவள்ளி, ராஜு நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ, சம்மந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு , கோவை , திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் மற்றும் விமான மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூக்களின் விலையை கிலோ ஒன்றுக்கு 900 முதல் 2000 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்த நிலையில், கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை முன்னிட்டு இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ 3780 ரூபாய்க்கு விற்பனையானது.
மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை கிலோ ஒன்றுக்கு மல்லிகை பூ 2400 முதல் 3 780 ரூபாய் வரைக்கும், முல்லைப்பூ 480 முதல் 560 வரைக்கும், தாக்கடா 550 ரூபாய் முதல் 900 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
செண்டு மல்லி 20 ரூபாய் முதல் 130 ரூபாய் வரைக்கும், கோழி கொண்டை 10 ரூபாய் முதல் 78 ரூபாய் வரைக்கும், ஜாதிமுல்லை 500ரூபாய்க்கும், கனகா மரம் 620ரூபாய்க்கு, சம்மங்கி 120 ரூபாய்க்கும், அரளி 270ரூபாய்க்கும், துளசி 50ரூபாய்க்கும், செவ்வந்தி 140ரூபாய்க்கும் விற்பனை ஆனது.