மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது.நேற்று காலை ஏழு மணியளவில் குழி தோண்டும் பணி தொடங்கியது.
இதில் பயன்படுத்தப்பட்ட முதல் ரிக் இயந்திரம் 35அடிக்கு குழி தோண்டியிருந்தது. பின்பு, பிற்பகல் 12 மணியளவில் கொண்டுவரப்பட்ட அதிதிறன் கொண்ட ‘ராக் பிரேக்கர்’ என்னும் இரண்டாவது ரிக் இயந்திரம் ஏழு மணிநேரத்தில் ஐந்தடிக்கு மட்டுமே குழி தோண்டியுள்ளது.இரவு பகலாக மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் கடுமையான பாறைகள் தென்படுவதால் குழி தோண்டும் பணி தாமதமடைந்தது.மேலும் இரண்டு ரிக் இயந்திரத்தாலும் பாறைகளை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் போர்வெல் மூலம் 4 துளைகள் போடும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நில அமைப்பியல் பேராசிரியர் சுப்பிரமணியன் கூறும் போது , நான் நடுகாட்டுப்பட்டி , மணப்பாறை பகுதி பாறைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவன். நடுகாட்டுப்பட்டி பாறைகள் மிகவும் 240 கோடி ஆண்டுகள் பழமையானவை . உடைப்பது மிகவும் கடினம் . போர்வெல் துளையிட்டாலும் அதன் துகள்களை எடுப்பது மிகவும் சவாலானது.சில நேரங்களில் நீர் புக வாய்ப்புள்ளது , அதே வேலையில் பூமிக்கு கீழே உள்ள பாறைகளை கண்டறிய கருவிகள் இல்லை என்று தெரிவித்தார்.