தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுவரை மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் வழியில் அலகு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில் வாட்ஸ் அப்பில் மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி குழு அமைக்கப்படும். வாட்ஸ்அப் குழுவில் பள்ளிகள் வாயிலாக வினாத்தாள்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதன்பிறகு தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வுத் தாள்களை ஸ்கேன் செய்து ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த தேர்வுத் தாள்கள் திருத்தப்பட்ட அதற்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.