கரூரில் வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் வேகமாக அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்..
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், மோதிய வாகனம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில் கரூரில் வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் அவர் உயிரிழந்த ஆய்வாளர் கனகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.