சேலம், ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவியரின் வருகைப்பதிவேட்டில் ஜாதி பிரிவு இடம் பெற்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேட்டில் மாணவியர்களின் பெயர்களுக்கு அருகே அவர்களின் ஜாதியும், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களை கொண்டு வேறுபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருகை பதிவேட்டின் புகைப்படமானது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது பள்ளியில் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, சைக்கிள்,உள்ளிட்டவைகளுக்காக சாதிவாரியாக பிரிப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாணவிகளுக்கு அனுப்பியது தவறு என்றும் தெரிவித்தார். மேலும் இதுபோல் நிகழாது எனவும் உறுதி அளித்துள்ளார்.