தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த வாரம் முழுவதும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தற்போது சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.