ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
பிறகு அவரது தாய் மற்றும் சகோதருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் நிலையம் வந்த அவர்கள் மணிகண்டன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டுக்கு அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்து போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டன் இறந்துள்ளார் என்று கூறி அவரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறி கல்லூரி மாணவரின் உறவினர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ராமநாதபுரத்தில் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த கூறப்படும் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.