மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்..
இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பவானிபூர், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் களமிறங்கினார்.
இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.. 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 21 சுற்றுகளின் முடிவில் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்..
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.. மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர்..
மற்ற 2 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. ஏற்கனவே மம்தா பானர்ஜி 2 முறை பவானிபூர் தொகுதியில் வென்றது குறிப்பிடத்தக்கது.. இதன்மூலம் இன்னும் நான்கரை ஆண்டு காலம் மம்தா பானர்ஜி பதவியில் தொடரலாம்..