தலைமைச் செயலரின் அறிக்கையில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்குக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை படித்து பார்த்த பிறகு நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது: “நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்த எந்த ஒரு அதிகாரியும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கடமையை செய்ய தவறி. அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது. அவர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் நீர்நிலைகள் எங்கு உள்ளது என்பது குறித்த விவரம் தெரிந்தால் தான் அதில் ஆக்கிரமிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய முடியும்.
அந்த விவரம் இந்த அறிக்கையில் விரிவாக இல்லை என்று கூறிய நீதிபதிகள் வருகிற 16-ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‘அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆக்கிரமிப்பு மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமைச் செயலாளரின் அறிக்கையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.