தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்தது. அதன்பின் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 நாளை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணை தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நகராட்சித் தலைவர் பதவியில் காங்கிரஸ்-6, மார்க் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக தலா- 1, விசிக-2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் மற்றும் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு விசிக போட்டி. இதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுக போட்டி என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.