தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு நாளில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
முதலில் கட்டாய கல்வி உரிமை சட்டம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே வழங்கும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதோ அத்தொகையை அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என இந்த சட்டப்பிரிவு தெரிவிக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 8448 பள்ளிகளில் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. 25% இடத்துக்கு கடந்த ஆண்டு 86 ஆயிரத்து 362 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அதன்படி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இரண்டு நாட்களில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.