தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 – 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணியில் மோதுவது உறுதியாகி உள்ளது.
அதேபோல் ரஜினியும் தனது அரசியல் வரவை உறுதி செய்துள்ளார். கமல் ஒரு புறமும், டிடிவி தினகரன் ஒரு புறமும் இருந்து வருகின்றனர். வரும் நாட்களில் எவ்வாறான கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தையும், கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தான் ஆர் கே நகரில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் விரும்பிய சின்னங்களை வழங்கியுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.