பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
அவரின் வருகை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சசிகலா நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னை வரும் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பதற்றத்தில் உள்ள சிலர் சதி செய்து, உண்மையான தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்க கூடாது. எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் மிக கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.