Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு – கிரேன் ஆபரேட்டர் கைது..!!

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிப்.,7ஆம் தேதி முதல் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை)  இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்சத கிரேனில் சிக்கி உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர்  பலியாகினர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நசரத் இணை இயக்குனர் குமார், நசரத்பேட்டை காவல்நிலையத்தில் லைக்கா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை , கிரேன் ஆப்ரேட்டர் அஜாக்கிரதையாக இருந்தார் என்று  புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், இயந்திரத்தை தவறாக பயன்படுத்துதல் என 3 பிரிவுகளின் கீழ் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவனை தேடி வந்தனர்.

மேலும் லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் வைத்து தலைமறைவாகியிருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் யார் யார் இருந்தார்கள் என்ற பட்டியலை தயாரித்துள்ள போலீசார்  நடிகர் கமல், இயக்குனர் சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்து சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |