ஆசிய கோப்பை போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது.
8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. இதையடுத்து நடைபெற்ற முதல் அரை இறுதியில் தாய்லாந்து அணியை இந்தியா 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் இலங்கை மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 1 ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி சில்ஹெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை சமாரி அதபத்து 6, அனுஷ்கா 2 என இருவரும் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.
அதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகளான ஹர்ஷிதா 1, நிலாக்ஷி டி சில்வா 6,ஹாசினி பெரேரா 0, கவிஷா தில்ஹாரி 1 என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி தத்தளித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.. இலங்கை அணியில் அதிகபட்சமாக இனோகா ரணவீர 18 மற்றும் ஓஷதி ரணசிங்க 13 ரன்கள் எடுத்தனர்.. இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும், ராஜேஸ்வரி மற்றும் சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அதிரடி சரவெடியாக விளாசி தள்ளினார். ஜெமிமா 2 ரன்னில் ஆட்டமிழந்த இழந்த போதிலும் ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடினார். இறுதியில் இந்திய மகளிர் அணி 8.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தானா 25 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஹர்மன் ப்ரீத் கவுர் 11 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் என்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது.
Make way for the 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒! 🙌
Begin the 🥁 as 🇮🇳 clinch the #WomensAsiaCup 2022 🏆 by 8 wickets! #BelieveInBlue #INDvSL #INDWvSLW pic.twitter.com/jR2l9O76dW
— Star Sports (@StarSportsIndia) October 15, 2022