தமிழகத்தில் அதிமுக மற்றும் அமமுக இணைக்கபடுமா என்ற கேள்விக்கு கேபி. முனுசாமி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவர் உடல்நிலை சரியான தால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர் காரில் அதிமுக கொடி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக மற்றும் அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கேபி.முனுசாமி, அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் தந்தால் அது பற்றி தலைமை பரிசீலனை செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.