கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் ஒருவர் உயிரிழந்ததால் 20ஆக இருந்த பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக உலகளவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 663,741 பேர் பாதித்துள்ளனர். 142,183 பேர் குணமடைந்த நிலையில் 30,880 பேர் உயிரிழந்துள்ளனர். 485,595 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25,207 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.