ஜப்பான் அரசு ஓமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறது.
ஜப்பான் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அங்கு குறைவான நபர்கள் தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். ஆனால் மே மாதத்திற்குப் பின் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
தற்போது, மொத்த மக்கள் தொகையில் 77% நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் ஜப்பானிலும் இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. எனவே அங்கு தீவிரமாக கொரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அங்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கப்பட்டது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வரும் ஜனவரி மாதத்திலிருந்து 60 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 8 மாதத்திற்கு முன் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைத்து மக்களும், பூஸ்டர் தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.