நாடு முழுவதும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சீக்கிய மதவழிப்பாட்டு தலம் சந்தை அருகே 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காஷ்மீரில் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாலும் மேலும் மத்தியஅரசு மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, போன்ற திட்டங்கள் தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதால், இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.
மேலும், பல இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சமும் நிலவி வருகிறது. தீவிரவாதிகளின் சதிகளை முறியடிக்க, மத்திய அரசும், மாநில அரசுகளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.
இந்நிலையில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள்,பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.