ரஷ்யா, உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதை ரஷ்யா எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லை பகுதியில் ஒன்றரை லட்சம் படை வீரர்களை நிறுத்தியது. எனவே, ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டை கைப்பற்றலாம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டமில்லை என்று கூறிய விளாடிமிர் புடின், தற்போது, அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால் கச்சா எண்ணெய்க்கான விலை 100 அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது.
ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டிற்குள் புகுந்ததன் அறிகுறியாக, கீவ் நகரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. மரியுபோல் என்னும் துறைமுக நகரத்தில் மிகப்பெரிய குண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டிருக்கிறது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டில் இருக்கும் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக இருக்கிறது.