தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் முதல் பாகத்தின் போதே 2-ம் பாகமும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 125 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதன் காரணமாக முதல் பாகத்திலேயே படத்தின் பட்ஜெட் முழுவதையும் படக்குழுவினர் எடுத்துள்ள நிலையில், 2-ம் பாகம் முதல் பாகத்தை தாண்டியும் அதிக அளவில் வசூல் சாதனை புரியும் என்று பட குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
இதனையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்கான டப்பிங் பணிகள், கிராபிக்ஸ் மற்றும் ரீகார்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் தற்போது மும்பை மற்றும் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே படத்தை திரையிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.