தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜமவுலி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இதன் காரணமாக படத்தை அமெரிக்காவில் திரையிட்டு காட்டுவதற்காக ராஜமவுலி சென்றுள்ளார். அதன் பிறகு ஜப்பானில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், அங்கு நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் ராஜமவுலி கலந்து கொண்டார். இதனையடுத்து மீண்டும் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகருக்கு ராஜமவுலி சென்றுள்ளார். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜமவுலி கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பான கதை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், என்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி முதல் பாகத்தை விட 2-ம் பாகம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் அதிக வசூல் புரிய வேண்டும் என்ற முனைப்புடன் தான் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.