தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் கமல் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படத்தை மீண்டும் இயக்குவதற்கு கமல் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பட விழா ஒன்றில் மருதநாயகம் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று கமல் கூறி இருந்தார்.
பல வருடங்களுக்கு முன்பாகவே மருதநாயகம் படம் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மருதநாயகம் படத்தின் பூஜையின் போது இங்கிலாந்து மகாராணி எலிசபெத் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் மருதநாயகம் திரைப்படத்தை கமல் பொறுப்பேற்று இயக்க இருப்பதாகவும், ஆனால் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சூர்யா அல்லது விக்ரமை வைத்து மருதநாயகம் படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.